பீகார் மாதிரி தேர்தல் போல தமிழகத்தில் தேர்தலை நடத்தக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருப்பதால் அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் கவனம் செலுத்தி வருகின்றன. கடந்த மாதம் நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில், கொரோனா காரணமாக முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் வாக்குச்சாவடி அதிகாரிகள் தபால் வாக்குச் சீட்டுகளை அளித்து, அவர்களது வாக்குகளைப் பெற்றனர்.
பீகார் மாதிரி தேர்தல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும் என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையத்திலிருந்து அக்டோபர் 3ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக, இதனால் 15 சதவிகித வாக்குகளில் முறைகேடு நடக்கும் எனக் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி. ஆர். பாலு, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், நியாயமான மற்றும் ஒளிவு மறைவற்ற தேர்தல் முறைக்கு முற்றிலும் எதிரானதோடு, போலி வாக்காளர்களை அதிகப்படுத்தியும், அதிகாரிளை தவறாக பயன்படுத்தவும் மற்றும் அரசியல் கட்சிகளிடையே சமமற்ற நிலையையும் உருவாக்கும் என்று கூறினார்.
“மாற்றுத்திறனாளிகள் என்ற வார்த்தை தேர்தல் நடத்தை விதிகளில் துல்லியமாக வரையறுக்கப்படாத நிலையில், தபால் வாக்குச் சீட்டுகள் அளிக்கும், தேர்தல் பொறுப்பு அதிகாரி தனது அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.முதியோர்கள் என்பவர்களுடைய வயதினை கணக்கிட எந்த துல்லியமான வரையறையும் தேர்தல் விதிகளில் குறிப்பிடப்படாத நிலையில், தபால் வாக்குச் சீட்டுகள் அளிக்கும், தேர்தல் பொறுப்பு அதிகாரி தனது அதிகாரத்தை, நியாயமான மற்றும் ஒளிவு மறைவற்ற தேர்தல் முறைக்கு முற்றிலும் எதிராக பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது என்று சுட்டிக்காட்டினார் டி.ஆர்.பாலு.
ஓட்டளிக்க வராத வாக்காளர்களுக்கு, தபால் வாக்குச் சீட்டுகள் அளிக்கப்பட்டால், அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி முகவர்கள் இல்லாத நிலையில், போலி வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகளவில் பெருக வாய்ப்பு உள்ளதாக குற்றம்சாட்டினார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கையை வெளியிடும் முன், அனைத்து அரசியல் கட்சிகள், சம்மந்தப்பட்ட பயனாளிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் ஆகியோர்களுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக வெளியிடப்பட்டது, தேர்தல் ஆணைத்தின் நோக்கத்தை சந்தேகத்திற்குள்ளாக்கிறது என கூறிய பாலு,
மேலும், இந்த சுற்றறிக்கை அனைத்து பயனாளிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்க மறுப்பதோடு, நியாயமான மற்றும் ஒளிவு மறைவற்ற தேர்தல் முறைக்கு முற்றிலும் எதிராக அரசு எந்திரத்தை பயன்படுத்தும் வழிமுறைகளை அதிகரித்துள்ளது. ஆகவே, சுற்றறிக்கையை ரத்துசெய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும், சம்மந்தப்பட்ட பயனாளிகளுடனும் கலந்தாலோசித்து, சிறந்த தீர்வைக் காணவும், நியாயமான மற்றும் ஒளிவு மறைவற்ற தேர்தல் முறையை உறுதிப்படுத்தவும், மற்றும் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கவும் அவர் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.