கருணாநிதியை முதலமைச்சராக அடையாளம் காட்டியதே எம்ஜிஆர் தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்ப்பேட்டையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நீர்வளத்துறை அமைச்சரும், திமுகவிம் பொதுச் செயலாளருமான துரைமுருகன், எத்தனை காலத்திற்கு துரோகிகளைப் பார்த்துக்கொண்டிருப்பது என்று நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசினார்.
அப்போது, அண்ணா காலத்தில் ஈ.வெ.கி.சம்பத்தை பார்த்தோம், அடுத்து எம்.ஜி.ஆரைப் பார்த்தோம், பின்னர் வைகோவையும் பார்த்தோம். இனிமேல் அப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஆகவே கட்டுப்பாட்டுடன் இருங்கள்” என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார். இதற்கு அதிமுக மற்றும் மதிமுகவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை சீண்டுவது நெருப்புடன் விளையாடுவது போன்றது என்று எச்சரித்த ஜெயக்குமார், எம்.ஜி.ஆர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கே வந்திருக்காது. கருணாநிதியை முதலமைச்சராக அடையாளம் காட்டியதே எம்ஜிஆர் தான். திமுக கட்சி ஒரு துரோக கும்பல் என கடுமையாக விமர்சித்தார்.