திருவெறும்பூர் இரயில் நிலைய மேம்பாட்டுக்கான சில கோரிக்கைகளை முன்வைத்து திருச்சி கோட்ட இரயில்வே அலுவலகத்தில் DRM ஐச் சந்தித்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கடிதம் ஒன்றை வழங்கினார்.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை, மக்களின் கோரிக்கைகளை ஏற்று உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார் எம்.பி துரை வைகோ. அந்த வகையில் திருச்சி கோட்ட ரயில்வே அலுலகத்தில் டி.ஆர்.எம்மைச் சந்தித்து கடிதம் ஒன்றை வழங்கினார். அதில், சோழன் விரைவு இரயிலை திருவெறும்பூர் இரயில் நிலையத்தில் நிறுத்திச் செல்லுவதற்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்தும் இதுநாள் வரை நிறுத்தப்படவில்லை. இதனை முக்கிய கோரிக்கையாக கருதி விரைந்து நிறுத்திட உத்தரவிட வேண்டும் என்றும், அத்துடன் செம்மொழி, எர்ணாகுளம் – காரைக்கால், இராமேஸ்வரம் – திருப்பதி, இராமேஸ்வரம் – சென்னை ஆகிய விரைவு இரயில்களையும் திருவெறும்பூர் இரயில் நிலையத்தில் நின்று செல்ல ஆவன செய்திட வேண்டியும், திருவெறும்பூர் பேருந்து நிலையத்திலிருந்து இரயில் நிலையம் செல்வதற்கு இரயில்வே காம்பவுண்ட் சுவர் ஒட்டிய பாதை தற்போது திறக்கப்பட்டு, அந்தப் பாதையில் மாநகராட்சி தார்ச் சாலைக்கும், இரயில் நிலைய இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் தளத்திற்கும் இடையில் சுமார் 130 அடி மண் தரையாக உள்ள இடத்தில் சாலை அமைத்து தரக் குறிப்பிடப்பட்டிருந்தது.





