அரசியல் கட்சி தொடங்குவது பற்றிய ஆலோசனையை எப்போது நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து வருவதாக பேட்டியளித்துள்ளார் மு.க.அழகிரி.
முன்னாள் மத்திய அமைச்சரும், மு.கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி 2014ஆம் ஆண்டு திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு திமுகவில் இணைய பேரணி, ஆலோசனைகள், திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது என அழகிரி எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியல் பற்றி பேசாமல் அமைதியாக இருந்துவந்தார்.
சமீபத்தில் அமித் ஷாவை சந்தித்து பாஜகவில் சேரவுள்ளதாக வெளியான தகவலை காமெடி எனக் கூறி மறுத்தார் அழகிரி. இடையிடையே ரஜினி கட்சியில் அழகிரி சேருவார் எனவும், கலைஞர் திமுக என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பிப்பார் எனவும் தகவல்கள் வெளியாகின. எனினும், சட்டமன்றத் தேர்தலில் தனது பங்கு நிச்சயம் இருக்கும். அது அரசியல் கட்சியா என்பது போக போகத் தெரியுமென அழகிரி தெரிவித்தார்.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் அழகர் கோயிலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இன்று பங்கேற்று வெளியே வந்த அழகிரியை சூழ்ந்துகொண்ட செய்தியாளர்கள் அரசியல் கேள்விகளை எழுப்பினர். சட்டமன்றத் தேர்தலில் உங்களுடைய பங்கு எந்த வகையில் இருக்கும் என்று ஒரு செய்தியாளர் கேட்க, வாக்களிப்பதுதான் தனது பங்கு என்றார்.
அரசியல் கட்சி பற்றி இன்னொருவர் கேட்க, அரசியல் கட்சி தொடங்குவது குறித்த ஆலோசனையை எப்போது நடத்துவது என்ற ஆலோசனை நடந்துவருவதாக தலையை சுற்றவைக்கும் வகையில் ஒரு பதில் சொன்னார். ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஏற்கனவே அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டதாகவும் கூறினார் அழகிரி. ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவீர்களா எனக் கேட்கப்பட, திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தால் சேர்ந்து நடிப்பேன் என்றார்.