அன்புமணி ராமதாஸ் சேலத்தில் இன்று மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் நிலையில் பாமக முக்கிய நிர்வாகிகள் ஜி கே மணி, அருள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இன்று கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் எனத் தெரிகிறது
அன்புமணி ராமதாஸ் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களைச் சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார். முதல் கட்டமாக பத்து மாவட்டங்களைத் தேர்வு செய்து கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடக்க இருக்கிறது.
பாமக கௌரவ தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜிகே மணி, பாமகவின் சேலம் சட்டமன்ற உறுப்பினரும், முக்கிய மாநில நிர்வாகியாகவும் இருக்கும் அருள் இருவரும் நெஞ்சுவலி காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இன்று சேலத்தில் நடைபெறும் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என தெரியவந்துள்ளது.
அன்புமணியின் கூட்டங்களில் பங்கேற்கும் முக்கிய நிர்வாகிகளை ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கி வரும் நிலையில் பாமக வின் 2 முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பாமக நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




