அன்புமணி உள்ளிட்ட 856 பேர் மீது திருவல்லிக்கேணி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு கேட்டு சென்னையில் அமைந்துள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். அவர்களில் ஒரு பகுதியினரை காவல் துறை கைது செய்தது.
இதனையடுத்து, தாமஸ் மன்றோ சிலை அருகில் நடந்த போராட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, இணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, செய்தித் தொடர்பாளர் கே.பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளித்தனர். இதனை ஏற்று முதல்வர் இட ஒதுக்கீட்டுக்கான வரையை அளவுகோள் செய்ய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். எனினும், இது இடஒதுக்கீடு வழங்குவதை காலம் தாழ்த்தும் உத்தி என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
இந்த நிலையில் கொரோனா காலத்தில் தடையை மீறி ஆர்பாட்டம் நடத்தியதாக அன்புமணி, ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 856 பாமகவினர் மீது திருவல்லிக்கேணி போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுபோலவே வெளி மாவட்டங்களில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த பாமகவினரின் வாகனங்களை காவல் துறையினர் தடுத்தி நிறுத்தினர். இதனால் பேருந்துகள், வாகனங்களில் மீது ஏறி கோஷங்கள் எழுப்பிய பாமகவினர், ரயில் மீது கல் எறிந்த காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவின. இதனால் பெருங்களத்தூர்- தாம்பரம் பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை வழித்தடத்தில் செல்லும் பயணிகள் ரயில் ரத்துசெய்யப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் 3 ஆயிரம் பேரை காவல் துறையினர் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.




