கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த த.மா.க மூத்த தலைவர் ஞானதேசிகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருக்கு வயது 71. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெஞ்சு வலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஞானதேசிகன். பின்னர் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டதால், கவலைக்கிடமான நிலைக்கு ஆளானார். அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உடல் நலம் தேறி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
விரைவில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று அவர் உயிர் பிரிந்தது. தமிழ் மாநில கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஞானதேசிகன் 2 முறை எம்.பி-ஆக இருந்தார். 2001-ம் ஆண்டிலிருந்து 2013-ம் ஆண்டு வரை இரண்டு முறை எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டவர். அக்கட்சியின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். ஞானதேசிகன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் இருந்தார். சிறந்த வழக்கறிஞராக பணியைத் தொடங்கிய அவர் பின்னர் காங்கிரஸ் கட்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.