அமித் ஷாவின் தமிழக வருகை திடீரென ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் தமிழக பாஜக தீவிரமாக கவனம் செலுத்தத் துவங்கிவிட்டது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுவிட்டார். கடந்த முறை அமித் ஷா சென்னை வந்த போது அரசு விழா என்றும் பாராமல் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என அறிவித்தார் துணை முதல்வர் பன்னீர்செல்வம்.
ஆனாலும், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி பாஜக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமைதான் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்யுமென பாஜக மாநில நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் வரும் ஜனவரி 14ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் துக்ளக் ஆண்டு விழாவில் கலந்துகொள்ள உள் துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வர இருந்தார்.
அப்போது முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அமித் ஷா அறிவிப்பு வெளியிடலாம் எனவும், கூட்டணி தொடர்பான இறுதி முடிவை அறிவிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்ற முடிவை எடுத்த ரஜினிகாந்தை அவர் சந்திக்க இருந்தார்.
read more: 100 சதவிகித இருக்கைகள்: மத்திய அரசு உத்தரவு-மாஸ்டர் படம் வெளியாகுமா?
இந்த நிலையில் அமித் ஷாவின் பயணத் திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான சரியான காரணம் என்னவென்று தெரிவிக்கப்படவில்லை. ஏற்கனவே பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் பயணத் திட்டமும் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.




