“மேடையில் முற்போக்குத்தனமாகப் பேசுவதும் நிஜ வாழ்வில் பிற்போக்குத்தனமாக இருப்பதும் திமுக அரசுக்கு ஒன்றும் புதிதல்ல” என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறந்த சம்பவத்தில் மிகப்பெரும் வன்முறை நடைபெற்றது. இந்த வன்முறை காரணமாக காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த நிலையில் இதுதொடர்பாக அண்ணாமலை திமுக அரசை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தி ஹிந்து நாளிதழில் வெளிவந்த செய்தி தமிழக காவல்துறையினரின் செயல்பாட்டையும் உளவுத்துறையின் இயலாமையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கலவரத்துக்குக் காரணமான அனைவரும் பட்டியலினத்தைச் சார்ந்தோர் என்ற முடிவுக்கு உளவுத்துறை எவ்வாறு வந்தது? இதில் சில கட்சிகள் சமூக நீதியை பின்னுக்குத் தள்ளி, அரசுக்கு அளித்த ரகசியத் தகவலை ஊடகத்திற்குக் கசிய விட்டதை முதன்மை குற்றச்சாட்டாக வைத்துள்ளனர்.
தமிழக உளவுத்துறையின் செயல்பாடு அனைவரும் அறிந்ததே! மேடையில் முற்போக்குத்தனமாகப் பேசுவதும் நிஜ வாழ்வில் பிற்போக்குத்தனமாக இருப்பதும் திமுக அரசுக்கு ஒன்றும் புதிதல்ல. திமுக ஆட்சியில் கலவரங்களும் புதிதல்ல இப்படி கலவரங்கள் முடிந்த பின் அதற்குப் பட்டியலின மக்களை வஞ் எஅன்சிப்பதும் புதிதல்ல. மீண்டும் ஒரு முறை ஒரு திறனற்ற அரசின் எடுத்துக்காட்டாக அறிவாலயம் அரசு விளங்கியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
-பா.ஈ.பரசுராமன்.