நெய்வேலி என்எல்சியில் 299 வட இந்திய பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழர் ஒருவர் கூட தேர்வு செய்யப்படாததற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான என்.எல்.சி. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் மின்தேவைக்காக காமராசர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் உருவாக்குவதற்கு 30 தமிழர் கிராம மக்கள் தங்களது நிலங்களை அரசுக்கு தாரை வார்த்து கொடுத்தனர். அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி, என்.எல்.சி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பதுதான். ஆனால், அப்படியான உறுதிமொழியை ஒன்றிய அரசும், என்.எல்.சி நிர்வாகமும் தொடர்ந்து மீறி வருவது கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் வழங்கிய நிலத்தில் இயங்கும் என்.எல்.சி. நிறுவனம் நிலம் கொடுத்தவர்கள், அந்நிறுவனத்தின் பணியிலிருந்து இறந்தவரின் வாரிசுகள், பழகுநர் பயிற்சி முடித்தவர்கள் என அனைவரையும் முற்றிலுமாகப் புறக்கணிப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழர்களின் வாழ்வுரிமை பறிபோகும் இந்த அநீதியைத் தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை எடுப்பதோடு என்.எல்.சி நிறுவனத்தில் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கும்,நிலம் வீடுகளை வழங்கிய வாரிசுகளுக்கும் முன்னுரிமை கொடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-பா.ஈ.பரசுராமன்.




