போக்குவரத்துறையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தாவிட்டால் சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைப்போம் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
30 லட்சம் பறிமுதல்
விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில், மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வியிடமிருந்து கணக்கில் வராத 117 சவரன் தங்க நகை மற்றும் 24 லட்சத்து 15 ஆயிரத்து 780 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது
அதேபோன்று, சென்னை, ஓசூர், தேனி, ஊத்துக்கோட்டை, நசரத்பேட்டை, வேலூர், தென்காசி, கன்னியாகுமரி, திருவள்ளூர், விழுப்புரம், கோவை உள்ளிட்ட 17 சோதனைச் சாவடிகளில் இன்று ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனைகள் நடத்தியதில் மட்டும் கணக்கில் வராத மொத்தம் ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சி.பி.ஐ. விசாரணை
போக்குவரத்துத் துறை என்பது இன்று முற்றிலும் ஊழலால் புரையோடிவிட்டதையே இத்தகைய சோதனையும், மீட்கப்பட்ட பணமும், நகைகளும் பிரதிபலிக்கின்றன. இதற்குப் போக்குவரத்துத் துறை அமைச்சர்தான் பொறுப்பு.எனவே, தமிழக அரசு தாமாக முன்வந்து, போக்குவரத்துத் துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும். அவ்வாறு பரிந்துரைக்காவிட்டால், நீதிமன்றம் மூலம் சி.பி.ஐ. விசாரணை கோருவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.