வேல் யாத்திரையின்போது பாஜகவினர் காவல்துறையினரிடம் அத்துமீறி செயல்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
முருகப்பெருமானின் பெருமையை பறைசாற்றும் விதமாக பாஜக சார்பில், நவ.6 ந்தேதி திருத்தனியில் தொடங்கி டிச.6 ந்தேதி திருச்செந்தூரில் முடிவடையும் வேல் யாத்திரை நடைபெறும் என மாநில பாஜக தலைவர் தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.
ஆனால், பாஜகவின் இந்த யாத்திரைக்கு கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து, பாஜக தரப்பு நீதிமன்றத்தை நாடிய போது, வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.
அரசு தடையையும் கடந்து அத்துமீறி வேல் யாத்திரையில் ஈடுபட்ட பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். யாத்திரையின் போது, திருவள்ளூர் மாவட்ட டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்தியதாக, பாஜவினர் சிலர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுக்கப்பட்டனர். இந்த சம்பவம் காவல்துறை தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, வேல் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், வேல் யாத்திரையின்போது பாஜகவினர் காவல்துறையினரிடம் அத்துமீறி செயல்பட்டதாக டி.ஜி.பி. தரப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக டி.ஜி.பி. தரப்பில் வாதிடுகையில், “பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பல இடங்களில் முறையாக மாஸ்க் அணியவில்லை. மத்தியில் ஆளும் பாஜகவினர் பொறுப்பை உணராமல் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படுகின்றனர். வேல் யாத்திரை, கோவில் யாத்திரை அல்ல; முழுக்க முழுக்க அரசியல் யாத்திரையே. நவ.6ம் தேதி பாஜகவினர் தடையை மீறி ஊர்வலம் சென்றனர்” என்று அடுக்கடுக்கான பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.