மதுரை எய்ம்ஸ் தொடர்பான கற்பனைக் காட்சியை உருவாக்க பத்து வருடங்கள் ஆகிவிட்டனவா என்று முதலமைச்சர் ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு பணிகள் எதுவும் நடைபெறவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனாலும் கூட எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரிக்கான அட்மிஷன் போடப்பட்டு அந்த மாணவர்கள் ராமேஸ்வரம் மருத்துவக்கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்து வருகின்றனர்.

கடந்த ஏழாண்டுகளாக தேர்தல் நேரங்களின் போதும் பாஜகவின் தேசிய தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தரும் போதும் எய்ம்ஸ் பேசு பொருளாகவே இருந்து வருகிறது. தமிழ்நாட்டுக் கட்சிகள் எய்ம்ஸ் தொடர்பான கேள்விகள் எழுப்புவதும், தமிழக பாஜக நிர்வாகிகள் தம் கட்டி பதில் அளிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
கடந்த தேர்தலின் போது உச்சகட்டமாக, தற்போதயை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பரப்புரையின் போது ஒற்றைச் செங்கலில் எய்ம்ஸ் என எழுதி இதுதான் அந்த எய்ம்ஸ், நான் உங்களுக்காக எய்ம்ஸ் கொண்டு வந்திருக்கேன் என மக்களிடம் எடுத்துக் காண்பித்தது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. திமுகவின் பிரசார யுக்தியில் எய்ம்ஸ் செங்கல் முக்கிய இடத்தைப் பிடித்தது என்று சொல்லலாம். அடுத்தாண்டு மே மாதத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில் மீண்டும் உதயநிதி செங்கலை எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இச்சூழலில் தான் மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் எய்ம்ஸ் மருத்துவமனையின் முப்பரிமாண கிராபிக்ஸ் வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக 2027 ஆம் ஆண்டிற்குள் எய்ம்சை கட்டி முடித்து விட வேண்டும் எனப் பணிகள் வேகமெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் அமித்ஷா மதுரை வந்திருந்த போது, எய்ம்ஸ் மருத்துவமனையை போய்ப் பார்த்தாரா என முதலமைச்சர் கேள்வி எழுப்பியிருந்தார். தற்போது இந்த கற்பனை வீடியோ வெளியான நிலையில், இதுக்கா பத்து வருசம் ஆச்சு என்பது போல கேள்வி எழுப்பி இருக்கிறார். இது தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கத்தில், மதுரைக்கு வந்த மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்கள் எய்ம்ஸ் என்ன ஆனது எனச் சென்று பார்த்தாரா? எனக் கேட்டிருந்தேன்.
அதற்குப் பதிலாக, இந்தக் கற்பனைக் காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளார்கள். 2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா? இதற்கே 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன என முதலமைச்சர் ஸ்டாலின் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.




