ஜெயலலிதாவை குற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்ததாக கூறிய ஆ. ராசாவுக்கு வழக்கறிஞர் ஜோதி பதிலளித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் தொகையைப் போல, 2 ஜியில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்தது திமுக தான் என்று அண்மையில் குற்றம்சாட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணியிலிருந்த காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு 2ஜி அலைக்கற்றை ஊழல் நிகழ்ந்ததாகவும் குற்றம்சாட்டினார். இவ்வழக்கில் ஸ்டாலினும் விரைவில் சிக்குவார் என கூறினார்.
இதற்கு பதில் அளித்த திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, முதல்வருடன் கோட்டையில் நேரடியாக விவாதிக்க தயார் என அறிவித்தார்.
அத்துடன் கோடி கோடியாக கொள்ளையடித்து அரசியலமைப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தி படுகொலை செய்த மன்னிக்க முடியாத கொள்ளைக்காரி ஜெயலலிதா என்றும் விமர்சித்தார்.
இந்த நிலையில் ஆ.ராசாவின் குற்றச்சாட்டுக்களுக்கு ஜெயலலிதாவின் முன்னாள் வழக்கறிஞர் ஜோதி சென்னையில் விளக்கம் அளித்தார்.
ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது கர்நாடக உயர் நீதிமன்றத்தால் விடுதலையாகிவிட்டார். உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் வழக்கு வருவதற்குள் இறந்துவிட்டார். ஒருவர் இறந்த பிறகு அவருக்கு எதிராக வழக்கு நடத்தக் கூடாது என்பது சட்டம் என்று குறிப்பிட்ட வழக்கறிஞர் ஜோதி,
“நிலைமை இப்படி இருக்க உச்ச நீதிமன்றம் எவ்வாறு ஜெயலலிதா அரசியலமைப்பு சட்டத்தை மீறிய கொள்ளைக்காரி என்று சொல்லியிருக்க முடியும். அவ்வாறு எதுவும் உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை.
பிரிவு 394ன் கீழ் ஜெயலலிதா குற்றமற்றவர். ஆ.ராசா 2ஜி வழக்கில் இருந்து விடுதலையானது போலவே ஜெயலலிதாவும் வழக்கில் இருந்து விடுதலையாகி விட்டார்” என்று விளக்கம் அளித்தார்.
ஆ.ராசா பேசிய விவகாரம் தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்த அவர், ” ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை தாக்கல் செய்திருந்தால் வழக்கில் இருந்து அவர் பெயர் விடுவிக்கப்பட்டிருக்கும். சசிகலா தரப்பு ஏன் இறப்புச் சான்றிதழை தாக்கல் செய்யவில்லை” எனக் கேள்வி எழுப்பினார்.
சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து ஆ.ராசாவுடன் விவாதிக்க நான் தயார் எனவும் சவால் விடுத்ததோடு, அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் வரத் தயார் எனவும் கூறினார். முதல்வரை அவதூறாக பேசிய ஆ.ராசாவை ஸ்டாலின் நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் ஜோதி. இவர் டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்காக ஆஜரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.