கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்த நகைகள் அவரவர் வீட்டிற்கே வந்து சேரும் என்றும் இதுதான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கும் தீபாவளி பரிசு என்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்ட 40 கிராமுக்கு உட்பட்ட நகைகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகத் தமிழக அரசு நேற்று முன்தினம் அரசாணை வெளியிட்டது. இதன் மூலமாக சுமார் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக திண்டுக்கல்லில் நேற்று (நவம்பர் 2) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழ்நாடு அரசு கடன் சுமையில் உள்ள நிலையிலும் கூட்டுறவு நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது. இது அரசின் சாதனையாகும். கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகள் அவரவர் வீட்டிற்கு வந்துவிடும். இது தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்குத் தந்த தீபாவளி பரிசு. கூட்டுறவு நகைக் கடைகளில் முறைகேடு செய்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”கொடைக்கானலில் கூட்டுறவுச் சங்கங்கள் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ளும் வகையில் கூட்டுறவு பயிற்சி கல்லூரி அமைய உள்ளது. இந்த ஆண்டு முதல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முல்லைப் பெரியாறு அணை உரிமையைத் தமிழக அரசு விட்டுத்தரவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக நீர்வளத் தறை அமைச்சர் துரைமுருகன் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். இரு தினங்களில் முல்லைப் பெரியாறு அணையை நேரில் பார்வையிட அவர் நேரில் வருகை தர உள்ளார்” எனவும் தெரிவித்துள்ளார்.




