ராஜ்யசபா உறுப்பினருக்கான சான்றிதழை தனது நண்பர் ரஜினியிடம் காட்டி வாழ்த்துப் பெற்றார் கமல்ஹாசன்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். வருகிற 25-ம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார்.

இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்த்தை சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சந்தித்து, ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட சான்றிதழைக் காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது, கமல்ஹாசனுக்கு, நடிகர் ரஜினிகாந்த் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக, புகைப்படங்களை கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில், புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன். மகிழ்ந்தேன் எனப் பதிவிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கும் முன்பு, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது.




