தன்னை பாஜகவின் பி டீம் என விமர்சித்தவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான 200 கோடி ரூபாய் ஊழல் புகார்களை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஆனால், தான் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை எனவும், ஒரு பைசா கூட லஞ்சமாகப் பெற்றதில்லை என்றும் சூரப்பா விளக்கம் அளித்தார்.
சூரப்பாவுக்கு எதிரான விசாரணையை கலையரசன் ஆணையம் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் சூரப்பா நேர்மையானவர் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தார்.
எனினும் துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவளித்ததன் மூலம் பாஜகவின் மற்றொரு குரலாகவே கமல்ஹாசன் ஒலித்துள்ளார் என சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினை ஆற்றியுள்ளார் கமலஹாசன்.
அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது எனச் சாடிய கமலஹாசன்,
“வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா?” என திமுக மற்றும் அதிமுகவை விமர்சித்தார்.
மேலும், “தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம். ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்” என்று பதிலடி கொடுத்துள்ளார் கமல்.




