மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ கட்சியின் முக்கிய பதவிக்கு வர உள்ளதாக காலை முதலே அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தன்னுடைய மகன் கட்சியின் தலைமை பொறுப்புக்கு வர உள்ளதாக கடந்த சில நாட்களாகவே பேச்சு அடிபட்டு வருகிறது. வைகோவின் உடல் நிலை மற்றும் வயதைக் காரணமாக கொண்டு மதிமுகவை அவருடைய மகன் வழிநடத்த உள்ளதாகவும், சட்டமன்ற தேர்தல் முடித்தவுடனேயே அதற்கான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை மறுத்த வைகோ, “என் மகன் அரசியலுக்கு வருவதை நான் துளியும் விரும்பவில்லை. ஆனால் தொண்டர்கள்தான் இயக்கம்.. அவர்கள் விரும்பும் முடிவுக்கு கட்டுப்படுவேன்” என சூசகமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் இன்று மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை முழுவதும் மதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகின்றனர். வைகோவுடன், துரை வைகோ இருக்கும் புகைப்படங்களுடன், ‘வெற்றி திருமகனே துரை வைகோ’, ‘வைகோவின் போர் முரசு’ போன்ற தீப்பொறி பறக்கும் வாசங்களைக் கொண்ட போஸ்டர்கள் கட்சி நிர்வாகிகளால் ஒட்டப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாகவே மாவட்ட செயலாளர்கள் கூடத்தில் பங்கேற்பதற்காக சில நாட்களுக்கு முன்பு வைகோவும், துரை வைகோவும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது இருவருக்கும் ஆளுயர மாலைகள் அணிவிக்கப்பட்டு, வீரவாள் பரிசளித்து மதிமுகவினர் தடபுடலான வரவேற்பு கொடுத்தனர். வைகோ அவருடைய மகனுடன் பலமுறை சென்னை வந்திருக்கிறார் என்றாலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு பல யுகங்களை கிளப்பியது.
இதனிடையே தன் மகனை கட்சியில் இணைத்து பதவி வழங்குவது குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடத்த வைகோ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட செயலாளர்கள், உயர் நிலை குழு உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளதாகவும், அதன் அடிப்படையில் துரை வைகோவிற்கான பதவி வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.