எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்துவதற்கு பதில் ரஜினி, கமல் அதிமுகவில் இணையலாம் என அக்கட்சி நாளிதழ் விமர்சித்துள்ளது.
2017ஆம் ஆண்டு கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், அதன்பிறகு எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்துவைத்து, ‘தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி அமைப்பேன்’ என்றார். தற்போது கமல்ஹாசனும் எம்.ஜி.ஆரை கையிலெடுத்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆரின் நீட்சி, வாரிசு நான் என தொடர்ந்து பேசிவருகிறார் கமல்ஹாசன்.
அதிமுக வாக்குகளைக் கைப்பற்ற நினைத்து கமல்ஹாசன் எம்.ஜி.ஆரைப் பற்றி பேசுவதாக அதிமுகவினர் விமர்சிக்கிறார்கள். ஆனால், தற்போதுள்ள அதிமுகவினர் எம்.ஜி.ஆரையே பார்க்காதவர்கள் எனவும், தான் அவரது மடியில் வளர்ந்தவன் என்றும் கமல் பதிலடி கொடுத்தார்.இந்த நிலையில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரை காட்டமாக விமர்சித்துள்ளது அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா.
குத்தீட்டி என்ற புனைப்பெயரில் எழுதப்பட்ட கட்டுரையில், “எம்ஜிஆரின் மடியில் வளர்ந்தவன் என்கிறார் கமல்ஹாசன். எம்ஜிஆர் ஆட்சியை நான் தருவேன் என்கிறார் ரஜினிகாந்த். இது போதாது என ஏற்கனவே பச்சை எம்ஜிஆர், கிளிப்பச்சை எம்ஜிஆர் என்று அரை டஜனுக்கும் மேலான ஆட்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
புரட்சித் தலைவர் தன் உதிரத்தின் விதையூன்றி உயிராக வளர்த்த இயக்கம் பொன்விழாவை நோக்கி வீறுநடை போடுகிறது. தொடங்கப்பட்டு 49 ஆண்டுகளில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆளும் இயக்கமாக உயர்ந்து ஓங்கி செழித்து நிற்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
read more: எய்ம்ஸுக்கு நிலம் அளிப்பதில் என்ன பிரச்சினை? முதல்வர்
மக்கள் திலகத்தை தங்கள் அரசியல் பிழைப்புக்கு சொந்தம் கொண்டாட நினைப்பவர்கள் புரட்சித்தலைவர் பெயரைப் பயன்படுத்தி அரசியல் அறுவடை செய்யலாம் என ஆசைப்படுகிறார்கள் வேண்டுமானால் அதிமுகவில் வந்து அடிப்படை உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம். புரட்சித்தலைவரின் கொள்கைகள் இன்னும் கூடுதலாகச் சிறக்க கழகத்தில் பங்கேற்று பணி செய்யலாம் என்று ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், “அதைவிட்டுவிட்டு தலைவரின் பெயரைச் சொல்லி தங்களை பலப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைப்பதும், தங்களின் அரசியல் இயக்கத்துக்கு புரட்சித்தலைவரின் பெயரை ஜீவநாடி ஆக்கி பிழைக்கலாம் என்று கனவு காண்பதும் கடைந்தெடுத்த பித்தலாட்டம் ஆகும். நாக்கிலே பசை தடவி பூச்சி பிடிக்க அலைகிற விஷப்பல்லிகளின் இத்தகைய யுக்தி கழகத் தொண்டர்களிடமும் பலிக்காது” என காட்டமாக விமர்சித்துள்ளது அக்கட்டுரை.