எம்.ஜி.ஆர் ஆட்சி குறித்து விமர்சித்த சீமானுக்கு அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருவதை முன்னிட்டு பிரச்சாரம் செய்யும் கமல்ஹாசன், தான் எம்.ஜி.ஆரின் நீட்சி, அவரின் மடியில் வளர்ந்தவன், அவரது கனவை நிறைவேற்றுவேன் என்றெல்லாம் பேசி வருகிறார். அதேபோல ரஜினிகாந்தும் எம்.ஜி.ஆர் ஆட்சியை அமைப்பேன் என்று கூறினார். ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதை தொடர்ந்து விமர்சிக்கும் கமல்ஹாசன், இதனையும் விமர்சித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ஈழ விடுதலைக்கு ஆதரவு தந்ததால் எம்.ஜி.ஆர் மீது பெரிய மரியாதை இருப்பதாகத் தெரிவித்த சீமான், மற்றபடி எம்.ஜி.ஆர் என்ன நல்லாட்சியைத் தந்தார் என்று கேள்வி எழுப்பினார். தமிழ்வழிக் கல்வியை ஆங்கில வழியில் மாற்றினார். கல்வி, மருத்துவத்தை தனியார் மயமாக்கினார் என்றெல்லாம் குற்றம்சாட்டினார். சீமானின் இப்பேச்சு அதிமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
read more: ரஜினிகாந்துக்கு கொரோனாவா? சன் பிக்சர்ஸ் அளித்த விளக்கம்!
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் இதற்கு பதிலடி கொடுத்தார். எம்.ஜி.ஆர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் ஒரு சகாப்தமாக இன்னும் இருக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தமிழுக்காக என்னென்ன செய்தார்கள் என புத்தகமாகவே அவருக்கு வழங்குகிறேன். படித்துவிட்டு வந்து பேசட்டும் என்றார்.
எம்.ஜி.ஆர் மீது புழுதியை வாரித் தூற்ற நினைத்தால் அது உங்களுக்கே பெருங்கேடாக அமையும். எம்.ஜி.ஆர் புகழை அழிக்கவே முடியாது என்று சீமானுக்கு எச்சரிக்கை விடுத்த ஜெயக்குமார், சீமான் யாருக்கு பி டீமாக செயல்படுகிறார் எனக் கேள்வியும் எழுப்பினார்.