மைசூர் பல்கலைக் கழகத்துடன் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் இணைக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய அரசு 2004ஆம் ஆண்டில் தமிழ் மொழியை செம்மொழி என்று அறிவித்து, அதன் வளர்ச்சிக்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு மைசூரில் இயங்கி வரும் இந்திய மொழிகள் மத்திய நிறுவனத்தில், செம்மொழித் தமிழ் உயர் ஆய்வு நிறுவனம் தொடங்கப்பட்டது.
பின்னர் தரம் உயர்த்தப்பட்டு, சென்னையில் செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனமாக 2007 ஆகஸ்டு மாதத்திலிருந்து செயல்படத் தொடங்கியது. இதன் தலைவராக தமிழக முதல்வர் பொறுப்பில் இருப்பவர்கள் செயல்பட விதிமுறைகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
மத்திய பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த சில ஆண்டுகளாக செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஏற்கனவே செம்மொழி ஆய்வு நிறுவனத்தை திருவாரூர் மத்திய பல்கலை கழகத்துடன் இணைக்க மத்திய அரசு முயற்சி செய்த நிலையில் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக அது கைவிடப்பட்டது.
தற்போது மைசூரு பல்கலைக்கழகத்துடன் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் இணைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகின.
இதுதொடர்பாக தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மைசூரு பல்கலைக்கழகத்துடன் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் இணைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் உண்மையல்ல. அப்படி ஒரு முயற்சி நடந்தால் தமிழக அரசு அதனை முறியடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.