மு.க.ஸ்டாலின் அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தடைக்கல்லாக இருக்கிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
தயாரிப்பாளர் சங்கம்
தமிழ் திரையுலகில், நடிகர், தயாரிப்பாளர் உள்ளிட்ட எந்த சங்கமாக இருந்தாலும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கம் தான் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக இருக்கிறது. சங்கங்கள் தோற்றுவிப்பதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனாலும், அவர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பது தான் அரசின் கருத்து.

தடைக்கல்
தி.மு.க.வுக்கு பாடம் புகுட்ட மக்கள் தயாராக உள்ளார். மு.க.ஸ்டாலின் அனைத்து வளர்ச்சி திட்டத்துக்கும் தடைக்கல்லாக உள்ளார். ஆட்சி பொறுப்பில் அவர்கள் செய்யாததை நாங்கள் செய்யும் போது அதனை பாராட்ட வேண்டும். சென்னை – சேலம் 8 வழிச்சாலை விவசாயிகள் பாதிக்கப்படாத அளவுக்கு கையகப்படுத்தப்பட்டு நிலத்துக்கு சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

எட்டுவழிச்சாலை
அந்த சாலைகளை உள்ளடக்கிய 5 மாவட்டங்களில் பலமுறை கருத்துகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனை அரசியலாக்கி சிலர் தூண்டுகிறார்களே தவிர, அங்குள்ள மக்கள் பாதிக்கப்படவில்லை.
ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை என்பது மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய அற்புதமான திட்டம். தமிழகமும் முன்னேற வேண்டிய நேரத்தில் அதனை வரவேற்க வேண்டும். இங்கே தூண்டி விடுபவர்களை பொதுமக்கள் நம்ப மாட்டார்கள்.
பட்டா
அ.தி.மு.க. ஆட்சியில் குற்றச்சாட்டு இருந்தால் தானே கனிமொழியால் கூறமுடியும். அவருக்கு 2ஜி அலைக்கற்றை வழக்கில் மீண்டும் திகார் சிறைக்கு செல்ல வேண்டுமோ என்ற பயம். குற்றச்சாட்டுகள் யார் மீது வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதா?

2021-ம் ஆண்டு ஆட்சி வந்தால் அவர்கள் அனைவரும் சிறை செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதற்கு பயந்து தான் ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்களை சிறைக்கு அனுப்புவோம் என கூறி வருகிறார். கனிமொழி, மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, செல்வம் என அதிகாரத்தை பகிர்ந்து கொண்டு தமிழகத்தை பட்டா போட்டு விற்கத்தான் செய்யவில்லை. அந்த நிலையை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.




