நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் கடுமையாக விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி 17ஆம் தேதி எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் கட்சி ஆரம்பித்து நேரடியாக தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இரண்டு நடிகர்களும் எம்.ஜி.ஆரையே முன்னிறுத்தி அரசியல் செய்கிறார்கள்.
எம்.ஜி.ஆர் ஆட்சியை அமைப்பேன் என ரஜினிகாந்த் 2018 பிப்ரவரி மாதமே தெரிவித்தார். மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் எம்.ஜி.ஆரின் வாரிசு என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இருவரையும் விமர்சித்த அதிமுக நாளேடு, எம்.ஜி.ஆரை பயன்படுத்தி பிரச்சாரம் செய்வதற்கு பதில் அதிமுகவில் இணையலாம் என பதிலடி கொடுத்தது.
இருவரையும் தற்போது கடுமையாக விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் எம்.ஜி.ஆர் பெயரை கையிலெடுக்கிறார்கள். எம்.ஜி.ஆரைப் பற்றி பேசினால் வாக்குகள் அவர் ஆரம்பித்த அதிமுகவுக்குத்தானே விழும் என்றார்.
read more: தபால் ஓட்டுக்களால் முறைகேடு நடக்கலாம்: திமுக வழக்கு!
விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பாக அவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு சீமான், ரஜினிகாந்தையும், கமல்ஹாசனையும் அடிக்கிற அடியில் இனி எந்த நடிகனுக்கு கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணமே வராது. இது விஜய் உள்பட அனைத்து நடிகர்களுக்கும் சேர்த்துதான். நடிப்பது மட்டுமே நாடாள்வதற்கு தகுதி என்பதை இத்துடன் ஒழிக்க வேண்டும் என்றும் கூறினார்.
அத்துடன் நான் கமல், ரஜினியைப் போல ரசிகர்களை சந்தித்து வரவில்லை. மக்களை நேரடியாக சந்தித்து அரசியலுக்கு வந்தவன் என்றும் சீமான் தெரிவித்தார்.