ஸ்டாலின் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறாரோ அதே தொகுதியில் தானும் போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியை 2010ஆம் ஆண்டு ஆரம்பித்த சீமான் 2016 சட்டமன்றத் தேர்தலில் 234 இடங்களிலும் தனித்துப் போட்டியிட்டார். கடலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியைத் தழுவினார். அதன்பிறகு வந்த 2019 மக்களவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டார். இடைத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகிறார்.
வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக கூட்டணி, தேர்தல் வியூகங்கள் என அனைத்து கட்சிகளும் தற்போதே தயாராகி வருகின்றன. தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்த சீமான், 234 தொகுதிகளில் சரிபாதியாக 117 தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுவார்கள் எனவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ரஜினி மன நிம்மதியை தேடி இமயமலைக்கு சென்றவர். இப்போது அவருக்கு முழுமையான ஓய்வு தேவைப்படுகிறது, அதனால் தான் அவர் அரசியலுக்கு வர மாட்டேன் கூறியிருப்பதை வரவேற்கிறேன்” என்றார்.
read more: சசிகலா சிறையில் இருந்து வந்தாலும்…ஜெயக்குமார் திட்டவட்டம்!
இந்துத்துவத்தை விட திமுகவை அதிகமாக எதிர்ப்பதற்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, “எங்கள் கட்சிகள் 90 சதவிகிதம் பேர் இந்துக்கள் என ஸ்டாலின் சொன்னார். ஆனால், நாங்கள் இந்துக்கள் கிடையாது, சைவர்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் எந்த தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறாரோ அதே தொகுதியில் நான் போட்டியிடுவேன்” என்று அறிவித்துள்ளார். ஆக, ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பட்சத்தில் அங்கு களம் காண தயாராகிறார் சீமான்.