அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் நாளை செய்தியாளர்களை சந்திக்கப் போவதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. திமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் ஸ்டாலின் என்பது உறுதி செய்யப்பட்டு அடுத்த கட்ட பணிகள் தொடங்கியுள்ளது.
ஆனால், அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் நான்தான் என ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் மல்லுக்கட்ட தொடங்கியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலேயே தேர்தலை சந்திப்போம் என பல நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனையே அண்மையில் நடந்த அதிமுக செயற்குழுவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அறிவுறுத்தினார். ஆனால், ஆட்சி இல்லாவிட்டாலும் கட்சியிலாவது தனி அதிகார மையமாக உருவெடுக்க வேண்டும் என ஓபிஎஸ் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் அரசு நிகழ்ச்சிகளை நேற்று புறக்கணித்த ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களுடன் நேற்று வீட்டிலேயே ஆலோசனை நடத்தினார்.

இதனால் ஓபிஎஸ் என்ன அதிரடி காட்டப் போகிறார் என்கிற பரபரப்பு நள்ளிரவை தாண்டியும் நீடித்தது. மேலும், துணை முதலமைச்சர் பதவியை ஓபிஎஸ் ராஜினாமா செய்யவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. திடீரென சென்னை பெருநகர வளர்ச்சி குழும கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் ஓபிஎஸ், அப்போது அவரது காரில் இருந்த தேசியக்கோடி கழட்டப்பட்டு இருந்தது அவர் பதவி விலக உள்ளார் என்ற சந்தேகத்தை மேலும் வலுவடைய செய்துள்ளது.

இதனிடையே, நிகழ்ச்சியில் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், நாளை நான் செய்தியாளர்கள சந்திக்க இருக்கிறேன் என்று மட்டும் பதில் கொடுத்தார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அக்டோபர் 7-ந் தேதிதான் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பார்கள் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் திடீரென ஓபிஎஸ் தனியே நாளை செய்தியாளர்களை சந்திக்கப் போவதாக அறிவித்திருப்பது, அதிமுக மட்டுமின்றி தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது.




