விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருந்தால் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள் என்று முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களுக்கு முதல்வர் ஆதரவு தெரிவித்தார். நெல்லுக்கு அ.தி.மு.க. அரசு கொடுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையே போதாது. அந்தக் குறைந்தபட்ச விலைக்கும் வேளாண் சட்டங்களில் உத்தரவாதம் இல்லை. வேளாண் சட்டங்களுக்கு ஓட்டுப் போட்டுவிட்டு இன்றைக்கு மாட்டு வண்டி ஓட்டி, விவசாயிகளை ஏமாற்றுகிறார்
குறைந்தபட்ச ஆதார விலை மட்டுமல்ல, விவசாயிகளின் நெல்லைக் கூட கொள்முதல் செய்யப் பழனிசாமிக்கு மனமில்லை. அதைக் கொள்முதல் செய்யக் கூட கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
மக்கள் ஏமாற்றம்
விவசாயிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்யுங்கள் என்று உயர் நீதிமன்றமே உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று, விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என்றவர் இதே பழனிசாமி. விவசாயிகளுக்கு மன்னிக்க முடியாத துரோகங்களை அடுக்கடுக்காகச் செய்து மக்களை ஏமாற்றுகிறார்.
தீர்மானம்
விவசாயிகள் மேல் உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் செயல்படுத்த முடியாது என்று சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வாருங்கள். கொரோனாவால் மக்களுக்கு நஷ்டம்.
ஆனால், பழனிசாமிக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கு, உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு லாபம். எடப்பாடி ஆட்சி தமிழகத்திற்குத் துரோகம் செய்த ஆட்சி. இந்த ஆட்சி, விரைவில் விவசாயிகளாலேயே விரட்டி அடிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.