ஊரடங்கிற்குப் பிறகு இந்தியா ஸ்திரத்தன்மையுடன் உள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இன்று மாலை 6 மணி அளவில் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாகவும், ஒரு தகவலை பகிர உள்ளதாகவும் ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருந்தார்.
அதன்படி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி,
கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவாக போராடி வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு நாட்டு மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரத் தொடங்கி உள்ளனர். நாட்டின் நிலைமை ஸ்திரதன்மையோடு உள்ளது என்றார்.
நாட்டின் பொருளாதாரம் படிபடியாக மேம்பட்டு வருவதாகவும், நாடு கொரோனா பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு வருகிறது எனவும் கூறியவர், கொரோனா பாதிப்பு குறைந்தாலும் ஆபத்து இன்னமும் முழுமையாக நீங்கவில்லை எனவும் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது என கூறிய பிரதமர், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். கொரோனா நோயாளிகளுக்காக 90 லட்சத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் இந்யாவில் தயாராக உள்ளதாகவும்,
வெளிநாடுகளை விட இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டு குறைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
மக்களை காக்கும் முயற்சியில் மத்திய அரசு வெற்றி கண்டுள்ளது. கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் மக்கள் அலட்சியமாக இருந்து விடக்கூடாது எனவும், பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
ஆயுதபூஜை, தீபாவளி, மிலாது நபி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரிசையாக வருவதால், நாட்டு மக்கள் அனைவரும், கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தினார்.
வீடுகளில் இருந்து வெளியே வருவோர் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், இல்லேயேல், அவரது குடும்பத்திற்கும், அவர் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் பேராபத்தாக முடியும் என பிரதமர் எச்சரித்தார்.
பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கி, அதற்கு எதிராக அந்நாடுகள் போராடி வரும் நிலையில், நாம் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டிய நேரமிது என்றும் பிரதமர் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார்.
கொரோனா தடுப்பூசி கண்டறியப்பட்டு, ஒவ்வொரு இந்தியருக்கும், அவை விநியோகிக்கப்பட்டு, அப்பணி முழுமை அடையும் வரையில், கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும் என்றார்.
மாஸ்க் அணிவது, அடிக்கடி கைகளை கழுவுவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை இடைவிடாது பின்பற்றுமாறு, வணங்கி, பொதுமக்களைக் கேட்டுக்கொள்வதாக பிரதமர் தெரிவித்தார்.




