முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனரும் மக்கள் திலகம் என அன்புடன் அழைக்கப்படுபவருமான எம்.ஜி.ஆரின் 104ஆவது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர்.
தேர்தல் வரவுள்ள நிலையில் சமீப காலமாக எம்.ஜி.ஆர் மீண்டும் கவனம் பெறத் துவங்கியுள்ளார். எம்.ஜி.ஆரின் நீட்சி, அவரின் வாரிசு தான் தான் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதேபோல, எம்.ஜி.ஆரை முன்னிறுத்தி பாஜக அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளது.
read more: கொரோனா தடுப்பூசியில் அரசியல் செய்ய வேண்டாம்: தமிழிசை
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “பாரதரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திரையுலகிலும் அரசியலிலும் அவர் பரவலாக மதிக்கப்பட்டார். அவர் முதலமைச்சராக இருந்தபோது, வறுமையை ஒழிக்கவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளைத் தொடங்கினார். அவரது பிறந்தநாளில் எம்ஜிஆருக்கு எனது புகழ் வணக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.