ஒன்பது மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
‘தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். ஓட்டு எண்ணிக்கை அக்., 12ல் நடைபெறும்’ என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 14) இரவு பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிவிப்பில், “தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் அக்டோபர் 6, 9 என இரு கட்டங்களாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க, கட்சியின் தலைமை நிர்வாகிகள், ஒன்பது மாவட்டங்களுக்குரிய துணைப் பொதுச் செயலாளர்கள், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் எனது தலைமையில் செப்டம்பர் 14 இணைய வழியில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி கருதி தனித்துப் போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன்படி உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து செப்டம்பர் 15, 16 தேதிகளில் விருப்ப மனு பெறப்படும்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு மூலமாக அதிமுக, பாமக இடையே இருந்த கூட்டணி முடிவிற்கு வந்துள்ளது.