பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களிடம் நட்பாக பழகி அவர்களை நயவஞ்சகமாக பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஒரு கும்பல் ஈடுபட்டு அதனை வீடியோவாக பதிவு செய்த கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இதுதொடர்பாக திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்திவந்தனர். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கில் மேலும் 3 பேரை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்தனர். பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த ஹேரேன்பால் (29), பைக் பாபு (27), வடுகபாளையத்தைச் சேர்ந்த அருளானந்தம் (34) ஆகிய மூவரை விசாரணைக்குப் பின் சிபிஐ கைது செய்தது. இவர்கள் மூவரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
read more: வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் ராஜினாமா செய்துவிடுவோம்: கமல்ஹாசன் அறிவிப்பு
இவர்களில் அருளானந்தம் பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணிச் செயலாளராக இருந்துவந்தார். இவர் அமைச்சர் வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டியளிக்கும் அவரது அருகில் இவர் நின்றிருந்தார். ஆனால், அருளானந்தத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என மறுத்துவிட்டார் ஜெயராமன். அருளானந்தத்தை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக அறிவிப்பும் வெளியிட்டுவிட்டது.