பொள்ளாச்சி விவகாரத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடச் சென்ற கனிமொழியை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சியில் இளம்பெண்களுடன் நட்பாக பழகி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அதிமுகவின் பொள்ளாச்சி நகர மாணவரணிச் செயலாளராக இருந்த அருளானந்தம் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் மேலும் சில அதிமுகவினருக்கு தொடர்பு இருக்கலாம் எனவும், இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய திமுக வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து, அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால், இந்த போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்தது.
தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள பொள்ளாச்சி நோக்கி சென்ற கனிமொழி எம்.பி. கார் கோவை ஈச்சனாரி அருகே தடுத்து நிறுத்தப்பட்டது.போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து தடுத்து நிறுத்தப்பட்ட இடத்தில் கனிமொழி எம்.பி. மற்றும் தி.மு.க.வினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி ஆர்ப்பாட்டத்தைத் தடுத்தால் தமிழகம் முழுவதும் திமுக மகளிர் அணியினர் சார்பில் போராட்டம் நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையின் எதிர்ப்பையும் எதிர்கொண்டு போராட்டத்திற்குச் சென்றார் கனிமொழி. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட அருளானந்தத்தோடு அமைச்சர்கள் இருந்த புகைப்படங்களை வெளியிட்டு கனிமொழி கடுமையான விமர்சனம் செய்தார்.
கனிமொழி பேசும்போது, “பொள்ளாச்சி போராட்டத்தை தடுக்க முயன்றனர். இந்த போராட்டத்தை தடுத்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, காவல்துறை பணிந்தது. இதை தடுத்தால் வெகுண்டு எழுவோம்” என்று தெரிவித்தார்.
read more: ரஜினி கட்சி ஆரம்பிச்சு உலகையே அச்சுறுத்தனும்: ரசிகர்கள் போராட்டம்!
பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்டவரின் பெயர்களை காவல்துறையே கூறியது. இன்று வரை அந்த கும்பல் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி வருகின்றனர். ஆளுங்கட்சியினர் தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும் என நினைக்கிறனர். அதிமுகவினருடனான ஆதாரங்கள் தொடர்ந்து வந்துகொண்டுள்ளது. எந்த வழக்குகள் போட்டாலும் நாங்கள் நீதி விசாரணைக்காக போராடுவோம். நீதியின் முன்பு சட்டத்தின் முன்பு கொண்டு வருவோம் எனவும் கனிமொழி பேசினார்.




