சமூகநீதி தவழும் தமிழ் மண்ணில் நடைபெறும் ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி காந்திய வழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி., துறையின் மாநிலத் தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.
பாளையங்கோட்டை ஆணவப் படுகொலை தொடர்பாக தனிச்சட்டம் இயற்ற அழுத்தம் கொடுக்கும் வகையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி., துறையின் மாநிலத் தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கடுமையான சட்டத்தினால் மட்டுமே சாதிய வெறி பிடித்தவர்களின் கொட்டத்தை அடக்க முடியும் என்பது எங்களது அசைக்க முடியாத நம்பிக்கை. சிறுபான்மையினர், பட்டியலின, பழங்குடியின மக்களின் பாதுகாவலராகத் திகழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மட்டுமே இத்தகைய சட்டத்தைக் கொண்டு வர முடியும் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.

ஆகஸ்ட் 4ந் தேதி நடைபெற உள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டம் அரசுக்கு எதிரானது அல்ல…ஆணவப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே நடத்தப்படுகிறது. காமராஜர் ஆட்சியில் பட்டியலினத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தார். கக்கன் போலீஸ் துறை அமைச்சராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் இதுபோன்ற தனிச்சட்டங்கள் தேவையில்லாமல் இருந்தது. காரணம், மதவாத சக்திகளின் கைகளில் அன்றைக்கு அதிகாரம் இல்லாமல் இருந்தது. அதனால் மத ரீதியான, சாதி ரீதியான மோதல்கள் இல்லாமல் இருந்தன. இன்றைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் எப்போதும் இல்லாத அளவுக்குப் பட்டியலினத்தைச் சேர்ந்த சி.வெ.கணேசன் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், கோவி.செழியன் உயர் கல்வித்துறை அமைச்சராகவும் மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும்,கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுச் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.
இருந்தாலும், மதவாத சக்திகளின் சாதிய தூண்டுதலின் காரணமாக இன்றைக்கு ஆணவப் படுகொலை நடக்கிறது. இந்தச் சூழலில் தான், ஆணவக்கொலையைத் தடுக்க தனிச்சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசை வலியுறுத்தி எனது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி துறை சார்பாக என் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஜனநாயக சக்திகள் அனைவரும் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.




