தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர், புதிதாக 8 லட்சத்து 97 ஆயிரத்து 694 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடபட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் குறித்த விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு வெளியிட்டுள்ளார். கடந்த நவம்பர் 16 ஆம் தேதி தமிழகத்தில் வரைவு வாக்காளர் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 பேரும், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பேரும், மூன்றாம் பாலினத்தவர்ஜ்கள் 7 ஆயிரத்து 246 பேர் இடம் பெற்றுள்ளனர்.18 வயது முதல் 19 வயது வரையிலான புதிய வாக்காளர்களாக 8 லட்சத்து 97 ஆயிரத்து 694 பேர் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் செங்கல்பட்டு மாவட்டத்துக்குட்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிக வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த தொகுதியில் மொத்தம் 6 லட்சத்து 94 ஆயிரத்து 845 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்துக்குட்பட்ட துறைமுகம் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் மொத்தமே 1 லட்சத்து 76 ஆயிரத்து 272 பேர் மட்டுமே உள்ளனர். மாவட்ட வாரியாக பார்க்கும் பொழுது அதிக வாக்காளர்கள் கொண்ட மாவட்டமாக சென்னை மாவட்டமும் குறைந்த வாக்காளர்கள் கொண்ட மாவட்டமாக அரியலூர் மாவட்டமும் உள்ளது. மேலும் ஜனவரி 1 ஆம் தேதிபடி 18 வயது பூர்த்தியானவர்கள் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் எனவும், ஆன்லைன் மூலம் www.nvsp.in என்ற முகவரியில் வின்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் குறித்த விவரங்களை http://elections.tn.gov.in என்ற முகவரியில் சென்று பார்த்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



