எம்.ஜி.ஆருடன் ரஜினிகாந்தை ஒப்பிடுவது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது. தன்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் அரசியல் கட்சி துவங்கவுள்ளதாக ரஜினி தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் கொடுத்த நல்லாட்சி, ஏழை மக்களுக்கான ஆட்சி. சாமானிய மக்களுக்கான ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் என்று முன்பு நடந்த ஒரு விழாவில் தெரிவித்திருந்தார். தற்போது எம்.ஜி.ஆருடன் ரஜினிகாந்தை ஒப்பிட்டு அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதற்கு அதிமுகவிலிருந்து பதிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எம்.ஜி.ஆர் இல்லை என்பதால் அவருடன் ரஜினியை ஒப்பிடுகிறார்கள். அவர் உயிரோடு இருந்திருந்தால் அப்படி சொல்கிறவர்களை கொன்றிருப்பார். எம்.ஜி.ஆரிடம் அடி வாங்கியவர்தானே ரஜினி என தனக்கே உரிய பாணியில் விமர்சித்தார்.
read more: வழக்கு தொடர்ந்த முதல்வருக்கு நன்றி: அதிமுகவுக்கு ஆ.ராசா எச்சரிக்கை!
எம்.ஜி.ஆர் தன்னை கட்டிவைத்து அடிக்கும்போது அதில் தலையிட்டு காப்பாற்றியவர் கலைஞர்தான் என்று ரஜினியே ஒரு பேட்டியில் கூறுகிறார். எம்.ஜி.ஆர் ஏன் கட்டிவைத்து அடித்தார் என ஒருமுறை ரஜினியிடம் கேளுங்கள் என்று கேள்வி எழுப்பினார் சீமான்.
அத்துடன், தன்னை வாழ வைத்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ரஜினி கூறுகிறார். அரசியலுக்கு வந்துதான் அதனை செய்ய வேண்டும் என்பதில்லையே. சொத்தில் பாதியை எழுதிவைத்தாலே போதுமே. பத்திரிகை வைக்காமல், சட்டை வாங்காமல் நேரடியாக மனமேடைக்கு செல்ல வேண்டும் என்பதைப் போல, அரசியலில் ஈடுபடாமல் நேரடியாக தேர்தலில் நின்று முதல்வராக வேண்டும் என ரஜினி நினைக்கிறார் எனவும் சீமான் குற்றம்சாட்டினார்.




