ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது போயஸ் கார்டன் வீட்டு முன்பு ரசிகர்கள் போராட்டம் நடத்தினர்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கோரி அவரது ரசிகர்கள் 30 ஆண்டுகாலமாக கோரிக்கை வைத்து வந்தனர். ஒவ்வொரு திரைப்படத்தின் போதும் ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக பரபரப்பு எழுந்து, பட ரிலீஸுக்குப் பிறகு அது அடங்கிவிடும். 2017ஆம் ஆண்டு கட்சி ஆரம்பிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஆனால், உடல்நிலை காரணமாக கட்சி தொடங்கமாட்டார் என்ற தகவல்கள் சமீபத்தில் கிளம்பியது. ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாகவும், டிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் ரஜினிகாந்த் அறிவித்தது ரசிகர்கள் நெஞ்சில் பால் வார்த்தது. கட்சி அறிவிப்பு வெளியிட இரண்டு நாட்கள் இருக்கும் நேரத்தில் இப்போது கட்சி ஆரம்பிக்க மாட்டேன் எனத் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை உண்டாக்கிவிட்டது. எனினும், தலைவர்கள் பலரும் உடல்நலம் கருதி ரஜினி எடுத்த முடிவை ஆதரிக்கிறார்கள்.
ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தை முற்றுகையிட்ட அவரது ரசிகர்கள், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், அதற்கு ஒத்துழைக்காத ரசிகர்கள், ரஜினிகாந்த் நேரில் வந்து சொல்ல வேண்டும். அப்போதுதான் கலைந்து செல்வோம் என்று கூறி முழக்கம் எழுப்பினர்.
read more: ரஜினியின் முடிவால் ஏமாற்றம்: ஆதரவு கேட்பாரா கமல்
இதேபோல ரஜினியின் அரசியல் முடிவில் அதிருப்தியடைந்த திருச்சியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பரமசிவம் ஆண்டாள் வீதியிலுள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே ரஜினியின் பேனர்களை எரித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.தக்கலை நீதிமன்றம் எதிரோ டீக்கடை நடத்தி வரும் ரஜினி ரசிகரான நாகராஜன், இன்று கறுப்பு தினம் என வீடியோ வெளியிட்டுள்ளார். தன் கடைக்கு முன்பு ஒட்டப்பட்டிருந்த ரஜினிகாந்தின் பேனரையும் அகற்றி அங்கிருந்து தூரமாக வீசிச் சென்றார்.