அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை காத்திருங்கள் என ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் தனது அரசியல் கட்சியைத் துவக்க இருக்கிறார். அதற்கான அறிவிப்பு வரும் 31ஆம் தேதி வெளியாகும் நிலையில், கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும் நியமனம் செய்தார்.
இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்த் மக்கள் சேவை கட்சி என்ற புதிய கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. மக்கள் சேவை கட்சி தலைவரின் முகவரி தேர்தல்ஆணைய பதிவேட்டில் எர்ணாவூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் சேவை கட்சிக்கு பாபா முத்திரை சின்னத்தை கேட்டதாகவும்,அதற்கு தேர்தல் ஆணையம் மறுத்து ஆட்டோ வழங்கியதாகவும் கூறப்பட்டது.
read more: நான் எம்.ஜி.ஆர் மடியில் வளர்ந்தவன்: அதிமுகவினருக்கு பதிலடி கொடுத்த கமல்
அடுத்த சிறிது நேரத்தில் ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆட்டோ ரிக்ஷாவை தங்களது இரு சக்கர வாகனத்தில் வரைந்துகொண்டு வலம் வர ஆரம்பித்தனர். மக்கள் சேவைக் கட்சி என்ற பெயரை பயன்படுத்தி ரஜினி ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட ஆரம்பிக்க அது 6,000 ட்விட்களைத் தாண்டியது.
இந்த நிலையில் கட்சி தொடர்பான ரசிகர்களுக்கு அறிவிப்பு ஒன்றை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ளார். “இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி அதில் இடம்பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன” என்று சுட்டிக்காட்டினார். தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்கள் காத்திருக்கும்படி சுதாகர் கேட்டுக்கொண்டார்.




