மாநிலங்களவை உறுப்பினராக கனிமொழி சோமு, ராஜேஷ் குமார் ஆகியோரைத் தொடர்ந்து எல்.முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த அதிமுகவின் வைத்திலிங்கம் மற்றும் கேபி முனுசாமி ஆகியோர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏக்கள் ஆகினர். இதனால் ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து காலி இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. கனிமொழி, ராஜேஷ் குமார் வெற்றி திமுக சார்பில் கனிமொழி சோமு மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். உறுப்பினர்கள் பலம் அடிப்படையில் இந்த இருவரும் வெற்றி பெற்று விடுவார்கள் என்பதால் அதிமுக தரப்பில் யாரும் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. இன்று மதியம் 3 மணியுடன் வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில் கனிமொழி சோமு மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
கே.பி.முனுசாமி இடத்தில் கனிமொழி சோமு நிறுத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு காலம் பதவி உள்ளது. வைத்திலிங்கம் இடத்திலிருந்து தேர்வாகியுள்ள ராஜேஷ் குமாருக்கு 1 வருடமும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மத்திய பிரதேசத்திற்கு தமிழகத்தில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்க போதிய பலம் இல்லாததால் மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பி வேட்பாளராக எல்.முருகன் அறிவிக்கப்பட்டார்.
சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது, தமிழக பாஜக தலைவராக இருந்த முருகனுக்கு மத்திய ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் பதவியை வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. இதையடுத்து 6 மாதங்களுக்குள் மக்களவை அல்லது மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எல்.முருகன் தேர்வு இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் களமிறக்கப்பட்டார் முருகன். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இதையடுத்து போட்டியின்றி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் முருகன். 15 வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் நான்கு சட்டசபை உறுப்பினர்களை பாஜகவுக்கு பெற்றுக் கொடுத்ததில் முருகன் பங்களிப்பு அபாரமானது. தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட முருகன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதற்கெல்லாம் பரிசாக மத்திய அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.




