காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவது மக்களை அவமதிக்கும் செயல் என்று மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஹைட்ரோகார்பன் திட்டம்
புதுச்சேரியில் தொடங்கி காரைக்கால் வரையிலான ஆழ்கடல் பகுதியில் 4,064.22 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மீனவர்களும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
அவமதிக்கும் செயல்
காவிரி டெல்டாவில் இன்னொரு ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு திணித்திருப்பது மக்களை அவமதிக்கும் செயலாகும். இத்திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில், கடலூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். அதனால், அப்பகுதி மீனவர்கள் வாழ்வாதாரங்களைத் தேடி இடம்பெயர வேண்டிய அவலநிலை ஏற்படும்.
ரத்து செய்க
காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த பிப்ரவரி 9ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது. அதற்குப் பிறகும் காவிரி பாசன மாவட்டங்களையொட்டிய கடல் பகுதியில் புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்களை மத்திய அரசு அறிவிப்பது நியாயமல்ல.
எனவே, இப்போது வழங்கப்பட்டுள்ள 5-வது உரிமம் மட்டுமின்றி, ஏற்கெனவே காவிரி பாசன மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த வழங்கப்பட்ட உரிமங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.