அமைச்சர்களுடனான சந்திப்பில் நடந்தது என்னவென்று பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் தனி இடஒதுக்கீடு வேண்டுமெனக் கோரி பாமக கடந்த டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து போராட்டங்களை நடத்தி வந்தது. இதுதொடர்பாக தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வந்ததை அடுத்து, எம்பிசி பட்டியலில் உள்ள மற்ற சமூகங்களுக்காக தனி இடஒதுக்கீடு கோரிக்கையை கைவிடுவதாகவும், அதே சமயம் இட ஒதுக்கீட்டில் பெரும்பகுதி உள் ஒதுக்கீடாக வன்னியர்களுக்கு கிடைக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு 2 மணி நேரம் வரை நடைபெற்றுள்ளது. வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு பற்றியும், சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்தும் பேசியதாக தகவல்கள் வெளியாகின.
இதுதொடர்பாக ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் இன்று என்னை தைலாபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள். வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பேசப்பட்டது. பொங்கல் திருநாளுக்குப் பிறகு மீண்டும் இதுகுறித்து பேசுவதாக உறுதியளித்துச் சென்றுள்ளனர் என்று குறிப்பிட்டார்.
read more: துணைவேந்தர்களின் பதவி: ஆளுநருக்கு திமுக எதிர்ப்பு!
அமைச்சர்களுடன் வன்னியர் இடப்பங்கீடு குறித்து மட்டும் தான் பேசப்பட்டது. அரசியலோ, தேர்தல் குறித்தோ பேசப்படவில்லை. வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்றும் தனது ட்விட்டில் விளக்கியுள்ளார்.