உடல் மட்டும்தான் தைலாபுரத்தில் இருக்கிறது, உள்ளம் போராட்டக் களத்தில்தான் உள்ளதென பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இடஒதுக்கீடு கேட்டு நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த பாமகவினர் இன்று அதிகாலை முதல் வாகனங்கள் மூலமாக சென்னையில் குவியத் துவங்கினர். கொரோனா தொற்று பரவலை காரணமாகக் கொண்டு போராட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுத்து அவர்களை பெருங்களத்தூரில் காவல் துறையினர் தடுத்தி நிறுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர் சென்னை செல்ல அனுமதிக்க வலியுறுத்தி அங்கேயே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த பேரி கார்டுகள் கீழே தள்ளிவிட்டனர். சாலை மறியலால் ஜிஎஸ்டி சாலையில் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் வரிசை கட்டி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அந்த சமயத்தில் தாம்பரம்-பெருங்களத்தூர் தடத்தில் வந்த ரயிலை நோக்கி ஓடிய பாமக இளைஞர்கள், அதன் மீது சராமாரியாக கற்களை வீசித் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன்பாக நடக்கும் போராட்டத்தில் அன்புமணி, ஜி.கே.மணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கொரோனா பரவல் காரணங்களுக்காக உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பாமகவின் நிறுவனர் ராமதாஸ் போராட்டத்தில் பங்கெடுக்கவில்லை. போராட்டம் தொடர்பாக ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் உடல் மட்டும் தான் தைலாபுரத்தில் உள்ளது…. உயிரும், உள்ளமும் சென்னை போராட்டக்களத்தில் தான் உள்ளன” என்று குறிப்பிட்டு போராட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதனிடையே தாம்பரத்தில் இருந்து சென்னைக்குள் வரும் புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ரயில்கள் மூலம் பாமகவினர் போராட்டக்களத்திற்கு செல்லவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.