தமிழக சட்டப்பேரவையில் இன்று CAA-விற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், அவை குறித்து டெல்லியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி-யுமான திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு இன்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம்; இதனை கொண்டு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு விசிக சார்ப்பில் நன்றி தெரிவித்தார்.
குடியுரிமை சட்ட மசோதாவை மாநிலங்களவையில் கொண்டு வந்த போது பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை! ஆனால், அதிமுக பாமக உள்ளிட்ட கட்சிகள் துணை போகி மசோதாவை நிறைவேற்றியது. இதனால் இரண்டு கட்சிகளும் என்றும் கரை படிந்த கட்சிகளாக மாறியது.
இந்த சட்டம் தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் தமிழ்நாடு அரசோ! அல்லது திமுகவோ தங்களையும் ஒரு பிரதிவாதியாக சேர்த்து கொள்ள வேண்டும்.
எத்தகைய ஆவணங்களும் இல்லாமல் இந்தியாவில் உள்ள மக்களிடம் ஆவணங்கள் வேண்டும் என மத்திய அரசு சொல்கிறது; ஆகவே என்.ஆர்.சி எனப்படும் தேசிய குடியுரிமை பதிவேடு திட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதிமுக, பாமக-வுக்கு குடிமக்கள் நலன்! பொதுமக்கள் நலன்! எதுவும் இல்லாமல் உள்ளார்கள். தங்களை தாங்களே அம்பலப்படுத்தும் விதத்தில் கூடாத சேர்க்கையால் அதிமுக இந்நிலையில் உள்ளது. அதனாலே அவர்கள் வெளிநடப்பு செய்து உள்ளார்கள்.
குடியுரிமை சட்டம் என்பது ஒரு சார்பு மன நிலையை கொண்டு குறிப்பிட்ட மதத்தை வெளியேற்றும் நோக்கில் மத்திய அரசு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இவை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இஸ்லாமிய சமூகத்தில் உள்ள பயங்கரவாத வாதிகளுக்கு குடியுரிமை இல்லை என சொல்வதை விட்டு விட்டு அனைத்து இஸ்லாமிய சமூகத்தையும் புறக்கணிக்கும் நோக்கில் மத்திய அரசின் செயல்பாடு உள்ளது” என அவர் தெரிவித்தார்.