கொரோனா பரவலை தொடர்ந்து பிரதமர் மோடிக்கான பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும், உலக அளவில் நோய்த்தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு எனும் நிலையை இந்தியா அடைந்துள்ளது.
பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் பலர் குணமடைந்தாலும் கூட, எஸ்.பி.பாலசுப்ரமணியம், வசந்தகுமார் எம்.பி, ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ, ரயில்வே இணையமைச்சர் என பலரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
இதைதொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிரதமருக்கான பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் சிகை அலங்காரத்திற்கு என்று அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் 5 பேர் உள்ளனர். ஆனால் கொரோனா தொற்று பரவியதை அடுத்து, மோடியின் தாடி மற்றும் சிகை திருத்தும் பணியில் ஈடுபடுவோருக்கு கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இப்போது, பிரதமர் யாரைச் சந்தித்தாலும், அவர்களுக்கு இடையே ஒரு கண்ணாடி தடுப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.