தொண்டர்களின் ஏகோபித்த வரவேற்புடன் 23 மணி நேர பயணத்திற்கு பிறகு சசிகலா சென்னை வந்தடைந்தார்.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்ற சசிகலா கடந்த மாதம் 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். பின்னர் கொரோனா பாதிப்பு இருந்ததால் சிகிச்சை பெற்று நேற்று அவர் தமிழகம் புறப்பட்டார். ஆரம்பத்தில் இருந்தே சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு இருந்தது. தொண்டர்கள் வெள்ளத்தில் சசிகலாவின் கார் மெல்ல ஊர்ந்து வந்தது.
கிருஷ்ணகிரியில் 500 கிலோ ஆப்பிள் மாலையுடன் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒசூர் சிப்காட் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில், ஒசூர் மோரணப்பள்ளி பிரத்யேங்கரா தேவி கோயில் ஆகிய கோவில்களுக்குச் சென்று அதிமுக வண்ண துண்டை ஏந்தியப்படி சசிகலா சாமி தரிசனம் செய்தார். அவர் சென்னை ராமாபுரம் வந்து சேரவே அதிகாலை 4 மணி ஆனது.
சென்னை ராமாபுரத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம், ஜானகி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் சசிகலா. அதுவரையிலும் தொண்டர்களின் உற்சாகம் குறையாமல் இருந்தது. வழிநெடுகிலும் மலர் தூவி வரவேற்பு அளித்து வந்தனர். சுமார் 23 மணி நேர பயணத்திற்கு பிறகு சென்னை தியாகராய நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் இல்லத்திற்கு சசிகலா வந்து சேர்ந்தார். சசிலாவிற்கு அவரது தொண்டர்கள் ஆரவாரமான வரவேற்பை அளித்தனர்.