தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி பெங்களூரு சிறைத் துறைக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவின் தண்டனைக் காலம் வரும் பிப்ரவரியுடன் முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையான 10.10 கோடி ரூபாய் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
சசிகலா ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என சிறைத் துறை நிர்வாகம் தெரிவித்தது. நன்னடத்தை தண்டனை குறைப்பு காரணமாக சசிகலா எந்நேரமும் விடுதலையாகலாம் எனவும் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார். ஆனால், சிறையிலுள்ள சசிகலாவுக்கு விடுதலையில் சிறப்பு சலுகை எதுவும் வழங்கப்படாது என்ற கர்நாடக மாநில உள் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, நன்னடத்தை விதிகள் அவருக்கு பொருந்தாது என தெரிவித்தது சசிகலாவின் முன்கூட்டிய விடுதலையில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
குற்றவாளிகளுக்கு நன்னடைத்தை காரணமாக மாதத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்படும். இதனை முன்வைத்து தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சசிகலா மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது நன்னடத்தை காரணமாக தனக்கு ஜெயில் தண்டனை நாட்களில் இருந்து நிவாரணம் (ரெமிஷன்) வழங்குமாறு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளிடம் தனது மனுவை சமர்பித்துள்ளார் சசிகலா. அதனை பரிசீலித்த சிறை அதிகாரிகள், அதனை சிறைத் துறை அனுப்பியுள்ளனர்.
எனினும், “நிவாரணம் ஒரு உரிமை அல்ல. அது சிறை அதிகாரிகளின் விருப்பம். முந்தைய தீர்வை மறுபரிசீலனை செய்ய சசிகலா கோரியுள்ளார். அவரது விண்ணப்பத்திற்கான முடிவு நிலுவையில் இருக்கிறது”என்று சிறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சசிகலாவின் மனு நிராகரிக்கப்பட்டால் ஜனவரி 27ஆம் தேதிதான் அவரது தண்டனை காலம் நிறைவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.




