சொத்து குவிப்பு வழக்கில் அபராத தொகையான 10 கோடி ரூபாயை செலுத்த அனுமதி கோரி, பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல் செய்துள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக, சொத்துகுவித்த வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, நன்னடத்தை காரணமாக சசிகலா முன்கூட்டியே வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த சூழலில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலில், சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதேசமயம், ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா கட்டியே ஆக வேண்டும். அபராத தொகையை கட்ட தவறினால் சசிகலா விடுதலை ஓராண்டுதள்ளிப்போகும் எனக் கூறப்பட்டது.
இதனிடையே, கடந்த வாரம் நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, சுதாகரன், இளவரசிக்கான அபராத தொகையை செலுத்தி விட்டனர்.
ஆனால், சசிகலாவிற்கு அபராத தொகையை செலுத்த அனுமதி கிடைக்காமல் இருந்ததால், பெங்களூர் சிவில் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்த தயாராக இருப்பதாக அவருடைய வழக்கறிஞர் மூலமாக மனு அளிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் அதற்கான முடிவு தெரியவரும் என்று கூறப்படுகிறது.