அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச இளம் அரசியல் தலைவர்கள் பயிற்சி முகாமிற்கு தமிழக பா.ஜ.க மாநில செயலாளர் SG சூர்யா சென்றுள்ளார். இந்நிலையில், SG சூர்யா தனது மகிழ்ச்சியை முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர்,
ஒவ்வொரு மனிதருக்கும் நினைவை விட்டு நீங்காத நாட்களென வெகு சில நாட்களே இருக்கும். இன்று வரையில், என் மொத்த வாழ்வின் பரிபூரணத்தை நான் உணர்ந்த தினம் பிப்ரவரி 9. என் நினைவை விட்டு நீங்காத சில நாட்களின் பட்டியலில் இனி முதன்மையாக இருக்க போவது பிப்ரவரி 9 மட்டுமே. மகிழ்வாக, முழுமையாக, பெருமையாக என என் மொத்தமும் சித்தமும் நெகிழ்ந்துருகி நின்ற தினம் இது.
இந்திய நாட்டின் ஏதோவொரு மூலையில், நடுத்தர குடும்பத்தில் பிறந்து எந்த வித பணபலமும், அதிகார பலமும் இன்றி, அரசியல் பின்புலமும் இன்றி மிக எளிமையாக வளர்ந்த இளைஞன் நான். கட்சியின் கொள்கை, கோட்பாடு ஆகியவற்றின் பால் ஈர்க்கப்பட்டு பா.ஜ.க எனும் பிரம்மாண்ட விருட்சத்தை தேடி வந்தமர்ந்த சிறு பறவை நான். கிளையில் அமர்ந்த பறவையாய் கருதாமல், என்னையும் அந்த பெருமரத்தின் அங்கமாகவே கருதியது என் கட்சி. உழைப்பும், திறனும் இருக்கும் யாவரும் இங்கு தலைவராகலாம், தலை நிமிரலாம் என்ற புதிய அரசியல் விதியை இந்நாட்டில் எழுதிய கட்சி பா.ஜ.க.
இந்த எளிய இளைஞனின் உழைப்பை அங்கீகரித்து, மாபெரும் அவை தனில் அமர வைத்து, மேலை நாடுகளின் முடி சூடா மன்னனாக விளங்கும் அமெரிக்க மண்ணில் என்னை நிறுத்தி அலங்கரித்து பார்த்த என் கட்சியின் கனிவை எண்ணி எண்ணி நெகிழ்கிறேன். இன்றும், இனி என்றும் என் கட்சிக்காக பாடுபட வேண்டும் என்கிற உந்துதல் என்னை முழுமையாக ஆட்கொண்டுள்ளது.
அமெரிக்காவில் நடைபெறும் இளம் தலைவர் மாநாட்டிற்கு இந்தியாவின் சார்பில் இளம் தலைவராக அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறையால் அழைக்கப்பட்டிருக்கிறேன். இது என் வாழ்நாள் வரம். இந்த வரத்தின் மகிழ்விலிருந்தே இன்னும் மீள முடியாத எனக்கு, அமெரிக்க மண்ணில் காத்திருந்தது அடுத்தடுத்த இன்ப அதிர்ச்சிகள் மட்டுமே. அவ்வாறாக எனது உடலை, உயிரை, சிந்தனையை முழுமையாக மகிழ்விலும், பெருமையிலும் நிறைக்கும் வகையில் அமைந்தது இன்றைய நிகழ்வு.
அமெரிக்காவின் ஐயோவா மாகாண சட்டசபைக்கு இன்று சென்றதும், அவைக்கு அழைத்து சென்றனர். அங்கு சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எட்டி ஆண்ட்ரியூஸை பேச அழைத்தார். அங்கிருந்த ஒவ்வொரு நிமிடமும் என் மனச்சிறகுகள் மகிழ்ச்சி சிறகுகளாய் மாறி பறக்க தொடங்கின. காரணம், அவர் அழைத்த மாத்திரத்தில் 100 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட அவையில் சபாநாயகர் உட்பட அத்துனை பேரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி எம்மை வரவேற்றனர். அந்த மாபெரும் சபையில், நான் முன்னோக்கி வைத்த ஒவ்வொரு அடியையும் என் கட்சி என் உழைப்புக்கு கொடுத்த இரத்தின கம்பளம். என் உடல், உயிர், மனம், எண்ணம் என என் சகலமும் ஒரு கணம் அசைவற்று நின்றது. உறைந்து போகும் நிலை என்றால் என்ன என்பதை அன்று தான் அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன். என் உட்புறம் ததும்பிய ஆனந்தத்தில் வெளிப்புறம் நடப்பவை யாதென்று தெரியாத வண்ணம் உணர்வற்று நின்றேன்.
மக்கள் மனங்களை வென்ற மகத்தான தலைவர்கள் அலங்கரித்த அவையில் இந்த எளியவனுக்கான அறிமுக உரையை திரு.ஆண்ட்ரியூ இவ்வாறு வாசித்தார், “இந்த பெருமைமிகு இளந்தலைவர்கள் மாநாட்டிற்கு பல சர்வதேச தலைவர்கள் முன்னாட்களில் தேர்வாகியுள்ளனர். இன்றைய இந்திய பிரதமரும் இந்நிகழ்ச்சிக்காக அமெரிக்கா வந்திருந்தார்” என்று அவர் கூறிய போது என் தேகம் சிலிர்த்தது.
ஓர் எளிய தொண்டனின் அதிகபட்ச கனவு என்னவாக இருக்க முடியும்? தன்னுடைய ஆதர்ஷ தலைவனின் பார்வை நம் பக்கம் விழாதா? அவருடைய நிழலில் நாம் இளைப்பாற மாட்டோமா? என இன்னும் பல ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் இருப்பது இயல்பு. அப்படிப்பட்ட எளிய தொண்டன் நான், எனக்கு கட்சியில் அங்கீகாரம் அளித்து, என் உழைப்புக்கு பதவியை பரிசளித்து, என் திறனை அங்கீகரிக்க அயல்நாட்டில் ஆசனம் வழங்கியதே பெரும் பேறு என்று நான் கருதும் சூழலில், சான்றோர்களும், அறிவில் கனிந்தோரும் நிறைந்த அந்த சிந்தனை சுரங்கத்தில் நம் பாரத பிரதமருடன் என் பெயரை ஒப்பிட்டு பேசி அவருக்கு நிகரான சரியாசனம் வழங்கிய இந்த பெரு வரத்தை என்னென்று சொல்வது?
வார்த்தைகள் இருந்தும் பேசாமல் இருப்பது மெளனம். ஆனால் அந்த நொடி என்னிடம் வார்த்தைகள் இல்லை, நன்றி என்கிற உணர்வும், இனி இந்த கட்சிக்காக நான் ஆற்ற வேண்டிய கடமையும் மட்டுமே முழுமையாக நிரம்பி வார்த்தைகளற்று நிச்சலனமாக உணர்ந்தேன். மனதில் மகிழ்வெனும் இன்பசுமையும், தோளில் இனி ஆற்ற வேண்டிய கடமையெனும் பொறுப்பும் இனி வாழ்நாள் முழுமைக்கும் இறங்காத அளவில் கூடியிருக்கிறது.
என்னை உயிரியல் ரீதியாக ஈன்றெடுக்கவில்லை எனினும், என்னை உணர்வு ரீதியாக ஈன்றெடுத்து என் கட்சி, மகனை உலகம் சான்றோன் என அழைக்கும் போது பெரிதுவக்கும் தாய் போல் பெரிதுவந்து என்னை இப்படியொரு தருணத்தில் நிறுத்தியிருக்கும் தாய்மடிக்கு இணையான என் பாரதிய ஜனதா கட்சிக்கும், என் கட்சி சொந்தங்களுக்கும், என்னை இயக்கும் ஈசனுக்கும் என் பேரன்பு, பெரும் நன்றி.
இவ்வாறு சூர்யா குறிப்பிட்டுள்ளார்.