200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும் இலக்கை அடைந்தே தீருவோம் என திமுகவினருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கட்சித் தலைவர்களும் தங்களது தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார்.
இதனைத் தொடர்ந்து தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள மடலில், தமிழ் மக்களின் பேராதரவுடன், திமுக ஆட்சி விரைவில் அமைந்ததும், கொள்ளைகளில் ஈடுபட்டோர் யாராயினும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, நீதியின் கண்டிப்பான கரங்களால் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.
நாளுக்கு நாள் திமுகவுக்குப் பொங்கிப் பெருகி வரும் ஆதரவு, நாடாளுமன்றத் தேர்தல் களம் போலவே, சட்டப்பேரவைத் தேர்தல் களத்திலும் பெருவெற்றியைத் தரும் என்பதை, உளவுத்துறையினர் அளித்துள்ள அறிக்கைகள் வாயிலாகவும் மக்களின் வெறுப்பு மற்றும் எதிர்ப்பலைகள் வாயிலாகவும் அதிமுக ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டு விட்டார்கள் என்ற ஸ்டாலின்,
கொள்ளையடித்தவற்றை மூட்டை கட்டிக்கொண்டு, கோட்டையைக் காலி செய்து, கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பது தெரிந்துவிட்டதால், பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு, திமுகவுக்கு எதிரான அவதூறுகளைப் பரப்பும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.
read more: 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!
போராடும் விவசாயிகளை இடைத்தரகர்கள் எனக் கொச்சைப்படுத்திய’போலி விவசாயியும், அரசியல் இடைத்தரகருமான அடிமை ஆட்சியின் முதல்வர், என் மீது குற்றம் சுமத்தி, பொய்க்கு மேல் பொய்யாக அவிழ்த்து விடுகிறார். இருண்ட தமிழகத்திற்கு மீண்டும் வெளிச்சம் கொண்டுவர திமுகவினால் முடியும் என்பதை மக்கள் உறுதியுடன் நம்புகிறார்கள். புத்தாண்டில் புது விடியல் நிச்சயம். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி என்கிற இலக்கை நாம் அடைந்தே தீருவோம். நமது உழைப்பால், ஒற்றுமையால், தோழமைக் கட்சிகளுடனான ஒருங்கிணைப்பால், இந்தப் புத்தாண்டு உதயசூரியன் ஆண்டாக மலர்ந்திடும் என்று தனது கடிதத்தில் கூறியுள்ளார்.