ரஜினிகாந்துக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்தே திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்துவந்தது. ஜனவரி மாதம் கட்சி தொடங்கவுள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளதால் அதற்குள் படப்பிடிப்பை முடிக்க வேண்டுமென பம்பரமாக சுழன்று படக்குழுவினர் பணியாற்றி வந்தனர்.
கொரோனா தொற்று அச்சம் காரணமாக நாள்தோறும் படப்பிடிப்பு தளத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதன்படி இன்று மேற்கொண்ட பரிசோதனையில் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், அண்ணாத்தே ஷூட்டிங் ஸ்பாட்டில் வழக்கமாக நடத்தப்படும் கொரோனா பரிசோதனையில் 4 பேருக்கு தொற்று உறுதியானது எனத் தெரிவித்தது. ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினருக்கு கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததாகவும், அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய அண்ணாத்தே படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
read more: 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்: தயாநிதிக்கு பாமக நோட்டீஸ்!
சிறுநீரக அறுவை சிகிச்சை செய்திருக்கும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதால் உடல்நிலை காரணங்களுக்காகவே கட்சி ஆரம்பிப்பதை ரஜினிகாந்த் தவிர்க்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால், தமிழ் மக்களுக்காக உயிரே போனாலும் சந்தோஷம் எனக் கூறி ரஜினி கட்சி தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்ற தகவல் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.