திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு திட்டம் நாளை தொடங்க உள்ளது.
திமுகவின் கடந்த நான்காண்டுத் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையிலும், புதிய உறுப்பினர்களை திமுகவில் சேர்க்கும் வகையிலும் மீண்டும் திமுக ஆட்சியை அமைக்கும் விதத்திலும் ஓரணியில் தமிழ்நாடு திட்டம் செயல்படுத்தப்படும் என திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் கட்சியினருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஓரணியில் தமிழ்நாடு திட்டம் நாளைத் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. ஜூலை 1 – சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் முறைப்படி ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை முதலமைச்சர் அறிவிப்பார். அடுத்து 38 மாவட்டங்களிலும் பொறுப்பு அமைச்சர்கள் ம்ற்றும் மாவட்டச் செயலாளர்கள் செய்தியாளர் சந்திப்பை நடத்துவர்.

ஜுலை 2 – 76 திமுக மாவட்டங்களிலும் ஓரணியில் தமிழ்நாடு கூட்டங்கள் நடத்தப்படும்.
ஜூலை 3 – தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடு வீடாகச் சென்று திமுகவினர் மக்களைச் சந்திப்பர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மூத்த நிர்வாகிகள் எல்லாரும் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் செல்வர். திமுக செயல் வீரர்கள் ஒருவர் விடாமல் வீட்டுக்கு வீடு சென்று பரப்புரைச் செய்வதை உறுதிசெய்வர்.
வீட்டுக்கு வீடு பரப்புரை – ‘டோர் டூ டோர்’!
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குச்சாவடி முகவர், பூத் டிஜிட்டல் ஏஜெண்ட், ஒரு பெண், ஒரு இளைஞர், BLC உறுப்பினர் கொண்ட குழுவுடன் நிர்வாகிகளும் செயல்வீரர்களும் இணைந்துசெல்வர். ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதிக்கு பிறகு, தமிழ்நாடு முழுக்க ஓரணியில் தமிழ்நாடு நிறைவு விழாக்கள் நடத்தப்படும்.




