பாஜகவின் அறிவுஜீவிப் பிரிவுத் தலைவராக இருந்த அர்ஜுன்மூர்த்தி ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை வரும் ஜனவரி மாதம் துவக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை 2017 டிசம்பர் 31ஆம் தேதி வெளியிட்டதைப் போல, வரும் 31ஆம் தேதி கட்சிக்கான அறிவிப்பை வெளியிடுகிறார். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு கட்சி ஆரம்பிக்கப்படுகிறது.
இதனால் தமிழகம் முழுவதுமுள்ள ரஜினி ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ரஜினியின் வீட்டு முன்னால் பட்டாசுகளை வெடித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, ஆரம்பிக்கப்போகும் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை நியமிக்கிறேன் எனவும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன்மூர்த்தி நியமிக்கப்படுகிறார் என்றும் பேட்டியளித்தார்.
தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட அர்ஜூன்மூர்த்தி கடந்த வாரம் வரை பாஜகவின் அறிவுஜீவிகள் பிரிவு மாநிலத் தலைவராக பணியாற்றிவந்தவர். அறிவுஜீவிகள் பிரிவின் தலைவர் என்று வைத்திருந்த ட்விட்டர் பயோவை, Now with Thalaivar என்று தற்போது மாற்றியுள்ளார்
ஏற்கனவே மக்களவைத் தேர்தல் அறிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ரஜினிகாந்த் பாஜகவிற்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்துவந்தார். காஷ்மீர் விவகாரத்தில் அது உச்சத்துக்குப் போய் மோடி, அமித் ஷா ஆகிய இருவரையும் அர்ஜுனர், கிருஷ்ணர் என புகழ்ந்துத் தள்ளினார். ரஜினியை பாஜகதான் வழிநடத்துகிறது என்ற குற்றச்சாட்டெல்லாம் முன்வைக்கப்படும் நிலையில், அக்கட்சியைச் சேர்ந்தவரையே தலைமை பொறுப்பிற்கு நியமித்துள்ளார் ரஜினி.




